Type Here to Get Search Results !

பாலக்கோடு புதிய தேசிய நெடுஞ்சாலையில் லாரி பார்க்கிங் பகுதியை திறக்க டிரைவர்கள் கோரிக்கை.


பாலக்கோடு, மே.25:


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே புதிய தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள லாரி பார்க்கிங் பகுதியை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம் சோகத்தூர் பகுதியில் இருந்து கர்நாடக மாநிலம் நல்லூர் வரையிலான 90 கிலோமீட்டர் நீள புதிய நான்கு வழிச்சாலை, சுமார் ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் தருமபுரி மாவட்ட எல்லைக்குட்பட்ட 34 கிலோமீட்டர் சாலைப்பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த புதிய தேசிய நெடுஞ்சாலை மூலம் தருமபுரியில் இருந்து பாலக்கோடு, ராயக்கோட்டை, ஓசூர் வழியாக பெங்களூரு செல்லும் தூரம் சுமார் 25 கிலோமீட்டர் குறைவதுடன், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் விரைவாக பயணிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பாலக்கோடு அருகே கரகதஹள்ளியில் கடந்த ஆண்டு சுங்கச்சாவடி திறக்கப்பட்டு வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், கொலசனஹள்ளி பகுதியில் லாரி ஓட்டுநர்கள் வாகனங்களை நிறுத்தி ஓய்வெடுக்க பார்க்கிங் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.


ஆனால், ஓராண்டு கடந்தும் அந்த லாரி பார்க்கிங் பகுதி இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை என டிரைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், “சுங்கச்சாவடி மட்டும் திறக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் டிரைவர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளுக்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. குறிப்பாக கடகத்தூர் பகுதியில் இருந்து தருமபுரிக்கு செல்லும் பிரிவு சாலை முறையாக அமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும், கொலசனஹள்ளியில் அமைக்கப்பட்ட பார்க்கிங் பகுதி பயன்பாட்டில் இல்லாததால் டிரைவர்கள் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி ஓய்வெடுக்க வேண்டிய நிலை உள்ளது” என்றனர்.


எனவே, டிரைவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, லாரி பார்க்கிங் பகுதியை உடனடியாக திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies