Type Here to Get Search Results !

தருமபுரி அருகே 108 வயது மூதாட்டிக்கு கனகாபிஷேகம் செய்து பிறந்தநாள் கொண்டாடிய குடும்பத்தினர்.


தருமபுரி, மே 25:


தருமபுரி அருகே 108 வயதான மூதாட்டிக்கு மகன், மகள்கள் மற்றும் பேரக் குழந்தைகள் ஒன்றிணைந்து கனகாபிஷேகம் செய்து ஆசி பெற்று, பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர். தருமபுரி மாவட்டம் பாளையம்புதூர் அடுத்த சுப்புரு செட்டி நகர் பகுதியை சேர்ந்த காலான் – புட்டியம்மாள் தம்பதியருக்கு இரண்டு மகன்கள் மற்றும் நான்கு மகள்கள் உள்ளனர். காலான் உயிரிழந்த நிலையில், புட்டியம்மாள் தற்போது வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.


தனது கணவர் வாழ்ந்த காலத்தில் கட்டப்பட்ட வீரபத்திரன் சாமி கோயிலை பராமரித்து வரும் அவர், 108 வயதிலும் யாருடைய உதவியும் இல்லாமல் தன்னுடைய அன்றாட பணிகளை தானே செய்து கொண்டு உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருகிறார். மேலும், கடந்த ஆறு ஆண்டுகளாக சாதாரண உணவுகளை தவிர்த்து பால் மற்றும் தண்ணீர் மட்டுமே அருந்தி வருவதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். 


இந்த நிலையில், 108வது பிறந்த நாளை முன்னிட்டு புட்டியம்மாளுக்கு அவரது மகன்கள், மகள்கள் மற்றும் பேரக் குழந்தைகள் வீரபத்திரன் சுவாமி கோயிலில் கனகாபிஷேகம் செய்து சிறப்பித்தனர். தொடர்ந்து குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், சிறியவர்கள் அனைவரும் மூதாட்டியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர். பின்னர் 108வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர்.


மேலும், பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மூதாட்டிக்கு மூக்குத்தி, தோடு, நெக்லஸ் உள்ளிட்ட தங்க நகைகள் அணிவித்து குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்தனர். 108 வயதிலும் ஆரோக்கியமாக வாழும் மூதாட்டிக்கு குடும்பத்தினர் கனகாபிஷேகம் செய்து பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies