பாலக்கோடு, மே.20:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, மாரண்டஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் 100-க்கும் மேற்பட்ட தனியார் மருந்துக் கடைகள், ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டன.
நாடு முழுவதும் நடைபெற்ற இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகத்தில் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் மருந்துக் கடைகள் அடைக்கப்பட்ட நிலையில், பாலக்கோடு தாலுக்காவிலும் மருந்து விற்பனையாளர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
ஆன்லைன் மருந்து விற்பனை காரணமாக போலி மருந்துகள் அதிகரித்து வருவதாகவும், தள்ளுபடி என்ற பெயரில் தரமற்ற மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாகவும் மருந்து விற்பனையாளர்கள் குற்றம்சாட்டினர். மேலும், மருத்துவர் பரிந்துரை சீட்டுகள் இல்லாமலேயே போலியான பரிந்துரைகள் மூலம் வலி நிவாரணி மாத்திரைகள் வாங்கி இளைஞர்கள் தவறாக பயன்படுத்தும் நிலை உருவாகியுள்ளது என்றும் தெரிவித்தனர்.
எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் மருந்து விற்பனையை மத்திய அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும் என தனியார் மருந்து விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

