பாலக்கோடு, மே. 09:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு புதிய தேசிய நெடுஞ்சாலையில் மினி சரக்கு லாரியில் மூட்டை மூட்டையாக கடத்தி வரப்பட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பாலக்கோடு புதிய தேசிய நெடுஞ்சாலை வழியாக குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக பாலக்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) ராஜாசுந்தரத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், பாலக்கோடு காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த மினி சரக்கு லாரியை போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால், லாரி நிற்காமல் வேகமாக சென்றதால் சந்தேகமடைந்த போலீசார் வாகனத்தை துரத்திச் சென்றனர்.
போலீசார் பின்தொடர்வதை அறிந்த மர்ம நபர்கள், மினி சரக்கு லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பி ஓடினர். பின்னர் லாரியை கைப்பற்றி சோதனை செய்தபோது, 20-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து குட்கா பொருட்கள் மற்றும் மினி சரக்கு லாரியை போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய நபர்களை தேடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

