பாலக்கோடு, ஜூன் 22:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள சித்திரைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு தர்மராஜன் சுவாமி - திரௌபதி அம்மன் கோயில் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவிழா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நாளான இன்று அதிகாலை முதலே தர்மராஜன் சுவாமி, திரௌபதி அம்மன், பீமன், அர்ஜூனன், நகுலன் மற்றும் சகாதேவன் உள்ளிட்ட மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து மலர் அலங்காரத்தில் சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இந்த திருவிழாவின் சிறப்பு அம்சமாக, ஒரு அடிக்கு ஒரு தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இவ்வாறு வழிபட்டால் மழை பொழிந்து விவசாயம் செழிக்கும், நோய் நொடிகள் நீங்கி குடும்பத்தில் வளம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
தொடர்ந்து மேளதாளங்கள், வாணவேடிக்கைகள் முழங்க தர்மராஜன் சுவாமி மற்றும் திரௌபதி அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. தர்மராஜா கோயிலில் தொடங்கிய ஊர்வலம் கடைவீதி, பேருந்து நிலையம், தக்காளி மார்க்கெட், பைபாஸ் சாலை வழியாக சென்று திரௌபதியம்மன் கோயிலை அடைந்தது.
விழாவில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரு அடிக்கு ஒரு தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா, ஊர் கவுண்டர்கள், மந்திரி கவுண்டர்கள், நாட்டு கவுண்டர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
.gif)

.jpg)