பாலக்கோடு, மே.07:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு புறவழிச்சாலையில் உள்ள நான்குரோடு பகுதியில் தடுப்புச் சுவர் மீது சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். பாலக்கோடு புறவழிச்சாலையில் தினமும் அதிக அளவில் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அனைத்து கனரக வாகனங்களும் புறவழிச்சாலையை பயன்படுத்த வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில், கடந்த 6ம் தேதி இரவு தருமபுரியை நோக்கி சென்ற சொகுசு கார், பாலக்கோடு நான்குரோடு பிரிவு சாலையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. அப்பகுதியில் சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவருக்கு போதிய எச்சரிக்கை பலகைகள் மற்றும் மின்விளக்கு வசதிகள் இல்லாததால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அனுபவித்து வருவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருவதாகவும், பலமுறை புகார் தெரிவித்தும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் போதிய மின்விளக்கு வசதி மற்றும் எச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)