பாலக்கோடு, மே.12:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த இருவரை போலீசார் கைது செய்து, 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பாலக்கோடு அவுசிங்போர்டு பகுதியை சேர்ந்த ரகு என்பவர், கடந்த 10ஆம் தேதி இரவு தக்காளி மண்டி அருகே தனது மொபட்டை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றிருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, அவரது மொபட் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், பாலக்கோடு காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், தண்டுகாரனஅள்ளியை சேர்ந்த கார்த்தி (36) என்பவர் மொபட்டை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் விரைந்து சென்று கார்த்தியை கைது செய்தனர். தொடர்ந்து அவரது வீட்டில் சோதனை நடத்தியதில், 2 மொபட்கள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்கள் என மொத்தம் 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், கார்த்தியிடம் நடத்திய விசாரணையில், சூடப்பட்டியை சேர்ந்த விக்ரம் (34) மற்றும் மாதம்பட்டியை சேர்ந்த பிரபு (33) ஆகியோருடன் சேர்ந்து இருசக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து விக்ரமை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள பிரபுவை தீவிரமாக தேடி வருகின்றனர். தொடர் பைக் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)