Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் மழை வேண்டி 12 கிராம மக்கள் சார்பில் அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி நடைபெற்றது.


பாலக்கோடு, மே.23:


தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில், மழை வேண்டி 12 கிராம மக்கள் இணைந்து அர்ஜுனன் தபசு நிகழ்ச்சியை பக்தி பரவசத்துடன் நடத்தினர். பாலக்கோடு ஸ்ரீபுதூர் மாரியம்மன் திருக்கோவில் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மஹாபாரத சொற்பொழிவு மற்றும் பாரம்பரிய கூத்து நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. கூத்துக்கலைஞர்கள் அர்ஜுனன் தபசு நிகழ்ச்சியை நடத்தினால் மழை பெய்யும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டநாள் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இதையொட்டி பாலக்கோடு சுற்றுவட்டாரத்தில் உள்ள 12 கிராம மக்கள் ஒன்றிணைந்து விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.


பகல் நேரங்களில் வேதம் பயின்றவர்கள் மஹாபாரதக் கதைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து இரவு நேரங்களில், அந்த கதைகளுக்கேற்ப கூத்துக்கலைஞர்கள் வேடமணிந்து நிகழ்ச்சிகளை நடத்தினர். இன்றைய நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக அர்ஜுனன் தபசு நடைபெற்றது. இதற்காக கோவில் எதிரே 40 அடி உயரத்திற்கு மேல் உள்ள பனைமரம் நட்டப்பட்டு, அதில் படிகள் அமைக்கப்பட்டிருந்தது. அர்ஜுனன் வேடமணிந்த கலைஞர் பக்திப் பாடல்கள் பாடியவாறு பனைமரத்தின் உச்சிப்பகுதிக்கு சென்று சிவபெருமானை நினைத்து தவம் புரியும் காட்சியை நிகழ்த்தினார்.


அதேநேரத்தில், பனைமரத்தின் அடிப்பகுதியில் பெண்கள் குழந்தை வரம் வேண்டி படுத்தபடி தவம் செய்தனர். மேலும், பஞ்சபாண்டவர் வேடமணிந்த கலைஞர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்று மஹாபாரத காட்சிகளை நடித்து காட்டினர். இந்த பாரம்பரிய நிகழ்ச்சியை திரளான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies