தருமபுரி, மே. 07:
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஏழ்மை தம்பதியினர், வேலூர் மாவட்டத்தில் செங்கல் சூளையில் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து வந்துள்ளனர். வேலை காரணமாக இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி நோக்கி சென்றபோது, நிலைதடுமாறி கீழே விழுந்ததில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மனைவிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
ஏழ்மையான சூழ்நிலையால் உயிரிழந்த பெண்ணின் உடலை நல்லடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாக மை தருமபுரி அமைப்பிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மை தருமபுரி அமைப்பினர் அந்த பெண்ணை தங்கள் சகோதரியாக கருதி, பச்சியம்மன் கோவில் மயானத்தில் இறுதி அஞ்சலி செலுத்தி மரியாதையுடன் நல்லடக்கம் செய்தனர்.
இந்த மனிதநேய பணியில் மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், அமைப்பாளர்கள் செந்தில், கிருஷ்ணன், கணேஷ் மற்றும் மருத்துவர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மை தருமபுரி அமைப்பின் அமரர் சேவை மூலம் இதுவரை 210 ஆதரவற்ற மற்றும் ஏழ்மையில் உயிரிழந்தவர்களின் புனித உடல்களுக்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)