தருமபுரி, மே.07:
தமிழகம் முழுவதும் மாம்பழ விற்பனை அதிகரித்து வரும் நிலையில், பழங்கள் இயற்கையான முறையில் பழுக்க வைக்கப்படுகிறதா அல்லது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாநில உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து, தர்மபுரி மாவட்ட நிர்வாகத்துக்கு வந்த புகார்களின் அடிப்படையில், மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்புத்துறையினர் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் தலைமையில், நகராட்சி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர், தர்மபுரி உழவர் சந்தை, சந்தைப்பேட்டை, திருப்பத்தூர் சாலை, பென்னாகரம் சாலை, பழைய பேருந்து நிலையம் மற்றும் பாரதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாம்பழ மொத்த விற்பனை குடோன்கள் மற்றும் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில், உழவர் சந்தையில் உள்ள ஒரு கடையில் தரமற்ற மற்றும் சந்தேகத்திற்கிடமான சுமார் 20 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அகற்றப்பட்டன. மேலும், வாங்கும் இடம் மற்றும் விற்பனை முறைகளை கண்காணிக்க விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. சந்தைப்பேட்டை பகுதியில் நடைபெற்ற ஆய்வில், இரண்டு மொத்த வியாபாரிகளிடம் ரசாயன திரவங்கள் (எதிபான்) தெளித்து பழுக்க வைக்கப்பட்டிருந்த சுமார் 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனுடன், ரசாயன கலவைகள் அடங்கிய பாட்டில்கள் மற்றும் ஸ்பிரேயர்களும் கைப்பற்றப்பட்டன. செயற்கை முறையில் பழுக்கவைத்த பழங்கள் விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு ரூ.1,000 மற்றும் ரூ.2,000 அபராதம் விதித்து எச்சரிக்கை செய்யப்பட்டது.
பேருந்து நிலைய பகுதிகளில் உள்ள பழக்கடைகளில் ஆய்வு செய்தபோது, ஒரு கடை குடோனில் ரசாயன பவுடர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மாம்பழங்கள் அங்கு இல்லாவிட்டாலும், பவுடர் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளருக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது. இயற்கையாக பழுத்த மாம்பழங்களை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி பழங்களை போடும்போது மேலே மிதந்தால் அது செயற்கை முறையில் பழுத்தது என்றும், அடியில் தங்கினால் இயற்கையாக பழுத்தது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பழத்தின் காம்பு பகுதியில் இயற்கை மணம் இல்லாமல் மருந்து வாசனை இருந்தாலும், ஒரே நிறத்தில் மஞ்சளாக காணப்பட்டாலும், உள்ளே வெள்ளை நிற சதைப்பகுதி இருந்தாலும் அது செயற்கையாக பழுக்கவைக்கப்பட்டிருக்கலாம் என எச்சரித்தனர்.
மாவட்டம் முழுவதும் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், விதிமுறைகள் மீறப்படுவது கண்டறியப்பட்டால் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், செயற்கை முறையில் பழங்கள் விற்பனை செய்யப்படுவதை பொதுமக்கள் கண்டால் 94440 42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)
.jpg)