தருமபுரி, மே.18:
17வது சட்டமன்ற கூட்டத் தொடரில் தருமபுரி குறித்து எம்எல்ஏ சௌமியா அன்புமணி பேசியதாக கூறப்படும் கருத்துக்கு எதிராக மருத்துவர் இராமதாஸ் ஆதரவு பாமக பிரமுகர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த பதிவில், “தர்மபுரியின் அடையாளம் வள்ளல் அதியமான் அவர்களின் வரலாறும், இந்த மண்ணின் உழைப்பாளி மக்களும்தான். அப்படிப்பட்ட மாவட்டத்தை ‘குடிகாரர்கள் அதிகம் உள்ள பகுதி’ என எந்த அரசுப் புள்ளிவிவரமும் இல்லாமல் பேசுவது மக்களின் மனதை புண்படுத்தியுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் தருமபுரி தொகுதியில் பதிவான மொத்த வாக்குகள் 2,33,205 என்றும், NDA கூட்டணியுடன் சௌமியா அன்புமணி பெற்ற வாக்குகள் 91,469 என்றும், அவருக்கு எதிராக 1,41,736 வாக்குகள் பதிவாகியிருந்ததாகவும் அந்த பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் விவசாயம், உழைப்பு மற்றும் வரலாற்று பெருமைகளுக்காக அறியப்படும் மண் என்றும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, குடிநீர் மற்றும் விவசாய பிரச்சினைகள் குறித்து சட்டமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டிய மக்கள் பிரதிநிதி, ஒட்டுமொத்த மாவட்ட மக்களுக்கும் அவப்பெயர் ஏற்படும் வகையில் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “மதுவிலக்கு, விழிப்புணர்வு மற்றும் வாழ்வாதார முன்னேற்றமே தருமபுரி மக்களின் கோரிக்கை. மாவட்ட மக்களின் உழைப்பை கொச்சைப்படுத்தும் வகையிலான கருத்துகளை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்” என்றும் அந்த பதிவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், பலரும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)