மாரண்டஹள்ளி, மே.08:
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே +2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த மாணவி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாரண்டஅள்ளி அருகே கன்னிகாபுரம் கிராமத்தை சேர்ந்த மலைவாழ் இனத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி வெங்கடேசன், தற்போது மாரண்டஅள்ளி மாரப்பன் தெருவில் வசித்து வருகிறார். இவரது மகள் நிவேதிதா (16), மாரண்டஅள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் +2 படித்து வந்தார்.
+2 பொதுத்தேர்வு எழுதியிருந்த நிவேதிதா, தேர்வு முடிவுக்காக காத்திருந்த நிலையில் இன்று வெளியான முடிவில் வரலாற்றுப் பாடத்தில் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட மாணவி, கோவிலுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் மாணவி வீடு திரும்பாததால் குடும்பத்தினர் தேடிச்சென்றபோது, மாரண்டஅள்ளி பெரியாண்டவர் கோவில் அருகே உள்ள புளியமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது தெரியவந்தது. இதைக் கண்டு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
தகவல் அறிந்து சென்ற மாரண்டஅள்ளி போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)