Type Here to Get Search Results !

கரகூரில் ஸ்ரீ செல்லியம்மன், சாக்கியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


பாலக்கோடு, மே. 29:


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள கரகூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்லியம்மன், ஸ்ரீ சாக்கியம்மன் மற்றும் ஸ்ரீ விநாயகர் கோயில்களின் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் கணபதி பூஜை நடத்தப்பட்டு விழா தொடங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள், வேத பாராயணங்கள் மற்றும் பல்வேறு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன.


விழாவின் முக்கிய நிகழ்வாக அதிகாலை கோமாதா பூஜை, ஸ்ரீ கணபதி ஹோமம், கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்சசூக்த ஹோமம், துர்கா சகஸ்ரநாம பாராயணம், மகா சாந்தி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. வேத மந்திரங்கள் முழங்க பூர்ணாஹூதி நிகழ்ச்சி நடைபெற்றது.


இதனைத் தொடர்ந்து யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்த கலசங்களை கோயில் முக்கியஸ்தர்கள் தலையில் சுமந்து ஊர்வலமாக கொண்டு வந்து, கோயில் விமான மற்றும் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தினர். பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.


கும்பாபிஷேகத்திற்குப் பிறகு கலசங்களில் இருந்து அபிஷேகம் செய்யப்பட்ட புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீ செல்லியம்மன், ஸ்ரீ சாக்கியம்மன் மற்றும் ஸ்ரீ விநாயகர் சுவாமிகளுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.


சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமிகளை தரிசிக்க கரகூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் கவுண்டர், குலதெய்வ குடும்ப பங்காளிகள், ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies