Type Here to Get Search Results !

தருமபுரி சிப்காட் வளாகத்தில் எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி ஆய்வு: உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் தொழிற்சாலைகள் அமைய வேண்டும் என வலியுறுத்தல்.


தருமபுரி, மே. 29:


தருமபுரி அருகே தடங்கம் ஊராட்சியில் அமைக்கப்பட்டு வரும் சிப்காட் தொழில் வளாகப் பகுதிகளை தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் சௌமியா அன்புமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தருமபுரி சிப்காட் திட்டப் பகுதியில் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். 30 மீட்டர் அகலத்தில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இணைப்புச் சாலை பணிகளும் நடைபெற்று வருவதாக கூறினார்.


சிப்காட் அமைப்பதற்காக மொத்தம் 1,700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் 1,230 ஏக்கர் தரிசு நிலமும், 500 ஏக்கர் விவசாயம் செய்யப்படாத பட்டா நிலமும் அடங்குவதாகவும் அவர் தெரிவித்தார். “ஒரு ஏக்கர் விவசாய நிலம் கூட சிப்காட் திட்டத்திற்காக கையகப்படுத்தப்படக் கூடாது என்பதில் பா.ம.க. உறுதியாக உள்ளது. திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது பா.ம.க. தான்” என்று சௌமியா அன்புமணி குறிப்பிட்டார்.


மேலும், தற்போது முதல் கட்டமாக 200 ஏக்கர் பரப்பளவில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், குடிநீர் தேவைக்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.4 கோடி மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


மின்சார வசதிகளுக்காக 17 ஏக்கர் நிலம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொழில் வளாகம் உருவாக்கப்பட வேண்டும் என்றும், தொழிற்சாலைகளின் கழிவுநீர் முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட பிறகே வெளியேற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


சிப்காட் அமைக்கப்படும் பகுதி மேடு பள்ளங்கள் நிறைந்ததாக இருப்பதால், தொழிற்சாலைகள் அமைக்க நிலத்தை சமன்படுத்த அதிக முதலீடு தேவைப்படுவதாகவும், அதனால் நிலத்தை சமன் செய்து தொழில் நிறுவனங்களுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.


தற்போது 9 தொழிற்சாலைகள் வர உள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்த அவர், தருமபுரி மாவட்ட இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய தொழிற்சாலைகள் இங்கு அமைய வேண்டும் என வலியுறுத்தினார். இந்த ஆய்வின்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட பா.ம.க. நிர்வாகிகள் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies