கடத்தூர், மே.13:
தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (13.05.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மணியம்பாடி பகுதியில் ஊராட்சி ஒன்றிய பொது நிதி 2025-26 திட்டத்தின் கீழ் ரூ.5.99 லட்சம் மதிப்பீட்டில் பள்ளியின் மூன்று வகுப்பறை கட்டிடங்கள் பழுது பார்க்கப்பட்டதையும், பள்ளி ரயில் வடிவில் அமைக்கப்பட்டதையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் மற்றும் கட்டமைப்புகளை ஆய்வு செய்த அவர், மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை முறையாக பராமரிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், குடிநீர் விநியோகம் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தி, நிலுவையில் உள்ள பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க உத்தரவிட்டார்.
மடதஹள்ளி ஊராட்சியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடங்களையும் ஆய்வு செய்து, கட்டுமான தரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதேபோல், கேத்துரெட்டிப்பட்டி ஊராட்சியின் வேப்பிலைப்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.16.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு. சுருளிநாதன், திருமதி கல்பனா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)