Type Here to Get Search Results !

ஒகேனக்கலில் மீன் விற்பனை நிலையங்கள் மற்றும் உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை திடீர் ஆய்வு


ஒகேனக்கல், மே.10:


தருமபுரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமான ஒகேனக்கலில், கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் அண்டை மாநிலங்கள் மற்றும் வெளியூரிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி மற்றும் இயற்கை அழகை ரசிப்பதோடு, மீன் வறுவல், மீன் குழம்பு உள்ளிட்ட உணவுகளை அதிகளவில் சுவைத்து வருகின்றனர். இதையடுத்து, மீன் விற்பனை நிலையங்கள் மற்றும் உணவகங்களில் தரம் மற்றும் சுகாதார நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், ஐ.ஏ.எஸ்., உத்தரவிட்டிருந்தார்.


இதன் பேரில், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் மற்றும் மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் விஜயராகவன் மேற்பார்வையில், பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், மீன்வள ஆய்வாளர் திருப்பதி, மேற்பார்வையாளர் மகேந்திரன் மற்றும் பாதுகாவலர்கள் லட்சுமணன், அருண் உள்ளிட்ட குழுவினர் ஒகேனக்கல் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.


மீன் மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள், இருப்பு குடோன்கள் உள்ளிட்ட இடங்களில் திலேபியா, பாறை, வாளை, ரோகு, கட்லா, மீர்கால், புல்கெண்டை, கண்ணாடி கெண்டை உள்ளிட்ட பல்வேறு வகை மீன்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் ஒரு கடையில் ஆந்திரா வகை மீர்கால் மீன்கள் கெடும் நிலையில் இருந்தது கண்டறியப்பட்டு, சுமார் 5 கிலோ மீன்கள் பறிமுதல் செய்து அகற்றப்பட்டதுடன், விற்பனையாளருக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டது.


மேலும், மீன்கள் நீண்ட நாள் கெடாமல் இருக்க ஃபார்மலின் ரசாயனம் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய சிறப்பு பரிசோதனை கருவிகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. பல்வேறு மீன்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் எந்தவொரு ஃபார்மலின் கலப்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.


நீர்வீழ்ச்சி செல்லும் பாதை, பேருந்து நிலையம் மற்றும் முதலைப்பண்ணை அருகிலுள்ள உணவகங்கள் மற்றும் மீன் வறுவல் கடைகளிலும் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், இரண்டு கடைகளில் பலமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் மற்றும் செயற்கை நிறமூட்டி பவுடர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.


மீன்களை வெயிலில் வைக்காமல் ஐஸ் பெட்டிகளில் பாதுகாப்பாக வைத்துப் விற்பனை செய்யவும், மீன் வறுவல் மற்றும் மசாலா தடவிய மீன்களை கண்ணாடி பெட்டிகளில் பாதுகாப்பாக காட்சிப்படுத்தவும், பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது என்றும், செயற்கை நிறமூட்டிகளை தவிர்க்க வேண்டும் என்றும் உணவு பாதுகாப்புத்துறையினர் அறிவுறுத்தினர். மேலும், அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு சான்றிதழ் பெற்று புதுப்பித்து வணிகம் செய்ய வேண்டும் என உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தெரிவித்தார்.



© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies