தருமபுரி, மே.12:
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 276 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று பெற்றுக்கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று (11.05.2026) நடைபெற்ற இந்த கூட்டத்தில், பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் தொடர்பாகவும், பட்டா வேண்டுதல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாகவும் மனுக்கள் அளித்தனர்.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் கோரியும் மனுக்கள் பெறப்பட்டன. மொத்தம் 276 மனுக்கள் பல்வேறு துறைகள் சார்பில் வரப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டு, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தகுதியான மனுக்களுக்கு விரைந்து தீர்வு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆர். கவிதா, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) சந்திரசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ், மகளிர் திட்ட இயக்குநர் சு. சுந்தர்ராஜன் உள்ளிட்ட பல்வேறு துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)