Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் நாளை வாக்கு எண்ணிக்கைக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார். – மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி, மே.03:


தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4, 2026 (திங்கட்கிழமை) காலை 8.00 மணிக்கு தருமபுரி வட்டம் செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கைக்காக ஒவ்வொரு தொகுதியிலும் 14 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மொத்தம் 23 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு மேசையிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு அவர்கள் பணியாற்ற வேண்டிய மேசைகள் காலை 7.00 மணிக்கு ஒதுக்கீடு செய்யப்படும். தபால் வாக்குகள் காலை 8.00 மணிக்கு எண்ணத் தொடங்கப்படும்; அதன் பின்னர் காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை தொடங்கும்.


பாலக்கோடு மற்றும் பென்னாகரம் தொகுதிகளுக்கு தலா 6 மேசைகளும், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் தொகுதிகளுக்கு தலா 7 மேசைகளும் தபால் வாக்கு எண்ணிக்கைக்காக அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேசைக்கும் கண்காணிப்பாளர், உதவியாளர் மற்றும் நுண்பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. செல்போன் உள்ளிட்ட பொருட்கள் அனுமதிக்கப்படமாட்டாது. முகவர்கள் காலை 7.00 மணிக்குள் மையத்திற்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அடையாள அட்டையில் க்யூஆர் குறியீடு கொண்டவர்களுக்கே உள்ளே அனுமதி வழங்கப்படும்.


ஊடகத்துறையினருக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்கு ரகசியம் காக்கப்படும் வகையில் குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே செய்தி சேகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, அனைத்து வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் விதிமுறைகளை கடைப்பிடித்து ஒத்துழைக்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.



© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies