தருமபுரி, மே.03:
தருமபுரி மாவட்டம் செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026 வாக்கு எண்ணிக்கை மே 4, 2026 நடைபெற உள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதனையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபடும் மத்திய சிறப்பு காவல் படையினருடன் இணைந்து, பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக க்யூ.ஆர். குறியீடு (QR Code) பயன்படுத்துவது தொடர்பான பயிற்சி கூட்டம் இன்று (03.05.2026) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமை தாங்கினார்.
வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைவதற்கு முன், அனைத்து அலுவலர்கள் மற்றும் முகவர்களும் காவல்துறை சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும், அவரவர் ஒதுக்கப்பட்ட மேசையில் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஒதுக்கப்பட்ட இடத்தை விட்டு மற்ற மேசைகளுக்கு செல்ல அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், வாக்கு எண்ணும் மையம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்டு, கட்டுப்பாட்டு அறையின் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை கடைப்பிடித்து முகவர்கள் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும் என்றும், விதிமுறைகளை மீறுபவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்றும் காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்த பயிற்சி கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.எஸ். மகேஸ்வரன், மத்திய மற்றும் மாநில அரசு அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் தனி வட்டாட்சியர் திரு. அன்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)