Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் வேளாண் மதிப்புக் கூட்டும் மையம் ஆய்வு: ரூ.9.25 கோடி புளி வர்த்தக மையப் பணிகளையும் பார்வையிட்ட ஆட்சியர்.


பாலக்கோடு, மே 29:


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் தண்டுகாரனஅள்ளியில் ரூ.137 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள வேளாண் விளைபொருட்கள் மதிப்பு கூட்டும் மையத்தை மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


வேளாண் விளைபொருட்களுக்கான 100 மதிப்பு கூட்டும் மையங்கள் திட்டத்தின் கீழ், ரூ.137 லட்சம் மதிப்பீட்டில் 35 சதவீத மானியமான ரூ.47.95 லட்சம் நிதியுதவியுடன் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் தக்காளி கூழ், தக்காளி விழுது, மிளகாய் கூழ், மிளகாய் விழுது, பழக்கலவை ஜாம் மற்றும் கெட்சப் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர், உற்பத்தி முறைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.


இந்நிறுவனம் விவசாயிகளிடமிருந்து நேரடியாக விளைபொருட்களை கொள்முதல் செய்வதால் இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகள் நல்ல விலை பெறுவதுடன், விலை வீழ்ச்சி காலங்களிலும் வருமானம் உறுதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.


ரூ.9.25 கோடியில் ஒருங்கிணைந்த புளி வர்த்தக மையம்

இதனைத் தொடர்ந்து, பாலக்கோடு வட்டம் செல்லியம்பட்டி கிராமத்தில் ரூ.9.25 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த புளி வர்த்தக மைய கட்டுமானப் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். தருமபுரி மாவட்ட புளி விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் 2 ஏக்கர் பரப்பளவில் இந்த மையம் அமைக்கப்பட்டு வருகிறது. பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


மேலும், இந்த மையம் செயல்பாட்டிற்கு வந்தவுடன் e-NAM முறையில் ஏலம் நடத்தப்பட்டு, விவசாயிகள் இடைத்தரகர்கள் இன்றி தங்களது விளைபொருட்களை நேரடியாக விற்பனை செய்து அதிக லாபம் பெற முடியும் என தெரிவித்தார்.


பள்ளி கட்டிடம் மற்றும் மழைநீர் சேகரிப்பு ஆய்வு

தொடர்ந்து, காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பிக்கனஅள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் புதிய கூடுதல் வகுப்பறை கட்டடப் பணிகளையும், ஜிட்டாண்டஅள்ளி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கட்டிடங்களின் மேற்கூரைகளில் விழும் மழைநீரை சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டமைப்புகளை முறையாக பராமரிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


இந்த ஆய்வின்போது வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) திரு. மு. இளங்கோவன், ஒழுங்குமுறை விற்பனைக்கூட செயலாளர் திரு. அருள்மணி, காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies