Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் இ-நாம் மூலம் ரூ.15 கோடிக்கு மஞ்சள் விற்பனை: 2,306 விவசாயிகள் பயனடைந்தனர்.


தருமபுரி, மே.29:


தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் விளைவித்த மஞ்சளை தரகு மற்றும் கமிஷன் கட்டணம் இன்றி நல்ல விலைக்கு விற்பனை செய்து பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் செயல்படும் தருமபுரி விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள அரூர், பென்னாகரம் மற்றும் தருமபுரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் இ-நாம் (e-NAM) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


இந்த திட்டத்தின் மூலம், தருமபுரி மற்றும் பென்னாகரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ஒவ்வொரு திங்கட்கிழமையும், அரூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மறைமுக ஏலம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மொத்தம் 7,335 குவிண்டால் மஞ்சள் ரூ.15 கோடி மதிப்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், 2,306 விவசாயிகள் அதிக விலை பெற்று பயனடைந்துள்ளனர்.


அரூர், பென்னாகரம் மற்றும் தருமபுரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் நடைபெறும் வாராந்திர ஏலங்களில் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாவட்ட வியாபாரிகள் பங்கேற்று வருவதால், மஞ்சள் விவசாயிகள் இந்த மறைமுக ஏலங்களில் கலந்து கொண்டு அதிக விலை பெறலாம் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.


மேலும், விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் மஞ்சளை நிழலில் நன்கு உலர்த்தி, தூசி மற்றும் சருகுகள் இல்லாமல் சுத்தமாக கொண்டு வந்தால் கூடுதல் விலை பெற வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விற்பனை செய்யப்பட்ட மஞ்சளுக்கான தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். எனவே, மஞ்சள் விற்பனைக்கு வரும் விவசாயிகள் ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு விவரங்களின் நகலை கொண்டு வருமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies