Type Here to Get Search Results !

பழைய பேருந்து நிலைய பிரச்சனைக்கு தேவைப்பட்டால் முதல்வரை சந்திப்பேன்: எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி பேட்டி.


தருமபுரி, மே. 29:


தருமபுரி பழைய பேருந்து நிலைய பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமெனில் முதலமைச்சரையே நேரில் சந்திக்கத் தயார் என தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார். தருமபுரியில் கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்ட நிலையில், கடந்த நான்கு மாதங்களாக பொதுமக்கள் மற்றும் பழைய பேருந்து நிலைய வணிகர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் பழைய பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி, பொதுமக்கள் மற்றும் வணிகர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒரே இரவில் புதிய பேருந்து நிலையத்திற்கு பேருந்துகளை மாற்ற முடிந்தபோது, மீண்டும் பழைய பேருந்து நிலையத்திற்கு கொண்டு வர முடியாதா என்ற கேள்வி எழுகிறது. இதுகுறித்து பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டுள்ளார். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து பேருந்துகளும் பழைய பேருந்து நிலையத்திற்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.


மேலும், “மாவட்டத்திற்குள் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் பழைய பேருந்து நிலையத்திற்கு வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தாலும், அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. 30 பேருந்துகள் வர வேண்டிய இடத்தில் தற்போது இரண்டு பேருந்துகள் மட்டுமே வந்து செல்கின்றன. புதிய பேருந்து நிலையத்தில் செயல்படும் நேரம் காப்பாளர் அலுவலகத்தை பழைய பேருந்து நிலையத்திற்கு மாற்ற வேண்டும்” என வலியுறுத்தினார்.


“பழைய பேருந்து நிலையத்தில் பணியாற்றும் நேரம் காப்பாளர்களே பேருந்துகளை புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்துவதோடு, அபராதம் விதிக்கப்படும் என கூறுகின்றனர். இது மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு மதிப்பில்லாத நிலையை ஏற்படுத்துகிறது” என்றும் அவர் குற்றம்சாட்டினார்.


பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் கடும் மனஉளைச்சலில் உள்ளதாக தெரிவித்த அவர், பழைய பேருந்து நிலையத்திற்கு மீண்டும் பேருந்துகள் இயக்கப்படாவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும், தேவைப்பட்டால் இதுதொடர்பாக தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து முறையிடுவேன் என்றும் தெரிவித்தார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies