தருமபுரி, மே.27:
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் சட்டம்-ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (27.05.2026) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வாகன ஓட்டிகள் சாலை விதிகளை முழுமையாக பின்பற்றுவதன் மூலம் விபத்துகளை தவிர்த்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயமாக தலைக்கவசம் அணிந்து வாகனங்களை இயக்க வேண்டும் என்றும், அதிக வேகத்தில் வாகனங்களை இயக்காமல் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலை விதிகளை முறையாக பின்பற்றினால் எதிர்பாராத சாலை விபத்துகளை தவிர்க்க முடியும் என தெரிவித்தார்.
போக்குவரத்துத்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும் என்றும், “விபத்தில்லா தருமபுரி” என்ற நிலையை உருவாக்க தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
அதேபோல், அபாயகரமான வளைவுகள், போதிய வெளிச்சம் இல்லாத பகுதிகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் வேகத்தடைகள், எச்சரிக்கை பலகைகள் மற்றும் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். ஹெல்மெட் அணியாமல் செல்வது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது போன்ற சாலை விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்குரிய பகுதிகளில் தாமதமின்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு சமூக அமைதியை பாதுகாக்க காவல்துறைக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.எஸ். மகேஸ்வரன், இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆர். கவிதா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. சோமசுந்தரம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி கே. கவிதா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)