தருமபுரி, மே.12:
தருமபுரி புதிய பேருந்து நிலையம் தொடர்பாக பொதுமக்களிடையே தொடர்ந்து அதிருப்தி நிலவி வரும் நிலையில், பழைய பேருந்து நிலையத்தை முழுமையாக செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
தருமபுரி நகர மையப்பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த பழைய பேருந்து நிலையம் பொதுமக்களுக்கு எளிதான போக்குவரத்து வசதியை வழங்கி வந்ததாகவும், புதிய பேருந்து நிலையம் நகரத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டதால் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் இரவு நேர பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மேலும், புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பின்னர் பழைய பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகள் குறைக்கப்பட்டதால் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுத்து, பொதுமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு பழைய பேருந்து நிலையத்தையும் முழுமையாக செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதிய பேருந்து நிலையம் காரணமாக பெண்கள் மற்றும் மாணவர்கள் இரவு நேரங்களில் பாதுகாப்பு சிரமங்களை எதிர்கொள்வதாகவும், அனைத்து பகுதிகளிலிருந்தும் வரும் மக்களுக்கு போக்குவரத்து சிரமம் அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எனவே, தருமபுரி மக்களின் நலனை கருத்தில் கொண்டு பேருந்து போக்குவரத்து முறைப்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு சிரமமில்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)