Type Here to Get Search Results !

தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


தருமபுரி. மே.17:


அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பிரிவுகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் 17.05.2026 அன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு, நோயாளிகள் பதிவு செய்யும் இடம், மருந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், கணினி மூலம் நோயாளிகள் விவரங்கள் பதிவு செய்யும் நடைமுறைகள் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.


இதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவு, அவசரகால பிரிவு, இயல்முறை சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, பெண்கள் நலப்பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மற்றும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பிரிவுகளை பார்வையிட்ட அவர், நோயாளிகளுக்கு ஸ்கேன் அறிக்கைகள் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் என மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.


மருத்துவமனை வளாகத்தின் தூய்மை, குடிநீர், மின்சாரம், கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும், நோயாளிகளுடன் வரும் உதவியாளர்கள் அமருவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும், பெண்களின் பாதுகாப்பிற்காக செயல்பட்டு வரும் “சுகி ஒருங்கிணைந்த சேவை மையம்” குறித்தும் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.


இந்த ஆய்வின் போது மருத்துவக்கல்லூரி கண்காணிப்பாளர் திரு. சிவகுமார், உள்ளிருப்பு மருத்துவர் டாக்டர் நாகேந்திரன், குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் ரமேஷ்பாபு உள்ளிட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உடனிருந்தனர்.



© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies