தருமபுரி, மே.16:
தருமபுரி மாவட்ட புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள மைதானத்தில், தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் தனியார் பள்ளி பேருந்துகளுக்கான சிறப்பு ஆய்வு முகாம் நடைபெற்றது. இந்த ஆய்வினை மாவட்ட ஆட்சியர் திரு. ரெ.சதீஸ், இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பள்ளி வாகனங்களில் அரசின் அனைத்து விதிமுறைகளும் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். மேலும், பள்ளி வாகன ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகம் நடத்தும் சிறப்பு முகாம்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவச கண் பரிசோதனை மற்றும் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு பள்ளி வாகன சிறப்பு விதிகள் 2012-ன் படி, ஒவ்வொரு ஆண்டும் பள்ளி வாகனங்கள் மாவட்ட அளவிலான குழுவினரால் ஆய்வு செய்யப்படுகிறது. அதன்படி, 2026-2027 கல்வியாண்டிற்காக தருமபுரி மற்றும் பாலக்கோடு பகுதிகளை சேர்ந்த 104 தனியார் பள்ளிகளில் இயங்கும் 894 பள்ளி வாகனங்களுக்கு ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் பள்ளி பேருந்துகளின் இருக்கை வசதிகள், காப்பீடு, தீயணைப்பு கருவி, முதலுதவி பெட்டி, வேகக்கட்டுப்பாட்டு கருவி, சிசிடிவி கேமராக்கள், அவசரகால கதவுகள் மற்றும் ஜன்னல்கள், ஹேண்ட் பிரேக், மாணவர்களின் புத்தகப்பை வைக்கும் வசதி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
முதற்கட்டமாக ஆய்வு செய்யப்பட்ட 276 பள்ளி வாகனங்களில் குறைபாடுகள் இருந்த 6 வாகனங்களின் தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டது. மேலும், சிறிய குறைபாடுகள் இருந்த 7 வாகனங்களை ஒரு வாரத்திற்குள் சரிசெய்து மீண்டும் ஆய்விற்கு கொண்டு வர அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
மேலும், தருமபுரி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினர் சார்பில், தீத்தடுப்பு சாதனங்களை பயன்படுத்தும் முறை குறித்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சியும் வழங்கப்பட்டது. இந்த ஆய்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.எஸ். மகேஸ்வரன், தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு. சி.க. ஜெயதேவ்ராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)