Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்ட நீர்நிலைகளில் இருந்து இலவசமாக வண்டல் மண் எடுத்து செல்ல அனுமதி மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி, மே.25:


தருமபுரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளிலிருந்து விவசாயம், மட்பாண்ட தொழில் மற்றும் தனிநபர்களின் வீட்டு பயன்பாட்டிற்காக வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தலைமையில் கடந்த 20.05.2026 அன்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, நீர்நிலைகளில் இருந்து வண்டல் மண் எடுத்து விவசாய பயன்பாடு, மட்பாண்ட தொழில் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு விலையில்லாமல் வழங்க தீர்மானிக்கப்பட்டது. இதன் மூலம் நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிப்பதுடன், விவசாய நிலங்களின் வளமும் மேம்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தருமபுரி மாவட்டத்தில் இதற்காக நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 43 ஏரிகள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 152 ஏரிகள் என மொத்தம் 195 தகுதியான நீர்நிலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த நீர்நிலைகளில் இருந்து வண்டல் மண் எடுத்து செல்ல மாவட்ட அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுடன், https://tnesevai.tn.gov.in இணையதளம் மூலம் தொடர்புடைய வட்டாட்சியர்கள் அனுமதி வழங்கி வருகின்றனர்.


மேலும், தகுதி வாய்ந்த நீர்நிலைகளின் பட்டியலை தருமபுரி மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான தருமபுரி மாவட்ட இணையதளம் (https://dharmapuri.nic.in) மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள், மட்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் தேவையான ஆவணங்களுடன் அருகிலுள்ள இ-சேவை மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த 10 நாட்களுக்குள் தொடர்புடைய வட்டாட்சியரிடம் இருந்து அனுமதி பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies