தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு அரசு விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் அரசின் அனைத்து திட்டங்களும் விவசாயிகளுக்கு முழுமையாக சென்றடைய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.
தருமபுரி மாவட்டத்தில் 2026 ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 85.58 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 2026-27ஆம் ஆண்டிற்கான சாகுபடி இலக்காக 1,92,780 ஹெக்டேர் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இதுவரை 1,50,204 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நெல், சிறுதானியங்கள், பயிறு வகைகள் மற்றும் எண்ணெய்விதைகள் உள்ளிட்ட விதைகள் போதிய அளவில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகள் தேவையான விதைகளை பெற்று பயன்பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தருமபுரி மாவட்டத்திற்கு 2026-27ஆம் ஆண்டிற்கான உரத் தேவை 67,270 மெட்ரிக் டன் என கணக்கிடப்பட்டுள்ளதாகவும், தற்போது 10,645 மெட்ரிக் டன் யூரியா, டிஏபி, பொட்டாஷ் உள்ளிட்ட உரங்கள் கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை நிலையங்களில் இருப்பில் உள்ளதாகவும் கூறப்பட்டது. இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் உயிர் உரங்களும் போதிய அளவில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 7,746 விவசாயிகள் 7,417.68 ஏக்கர் பரப்பளவில் பயிர் காப்பீடு செய்துள்ளதாகவும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் 467 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கூட்டுறவுத்துறையின் மூலம் 2025 ஏப்ரல் முதல் 2026 மார்ச் வரை 63,222 விவசாயிகளுக்கு ரூ.643.98 கோடி மதிப்பிலான பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இக்கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பட்டு வளர்ச்சி, கூட்டுறவு உள்ளிட்ட துறைகளின் அலுவலர்கள் பங்கேற்று துறை வாரியான திட்டங்களை விளக்கினர். விவசாயிகள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
மேலும், விவசாயிகளின் உற்பத்தி மற்றும் வருமானத்தை உயர்த்தும் வகையில் அனைத்து வேளாண் நலத்திட்டங்களும் அவர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுரை வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகிகள், வேளாண் மற்றும் கால்நடைத் துறை அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)