தருமபுரி, மே.29:
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் 2 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஜூன் 2026 மாதத்தில் தவறாமல் சேர்க்குமாறு பெற்றோர்களுக்கு மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அழைப்பு விடுத்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 1,336 குழந்தைகள் மையங்கள் மூலம் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் ஊட்டச்சத்து மிக்க மதிய உணவு மற்றும் முன்பருவக் கல்வி வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக 2 முதல் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு செய்கை, பாடல், கதை, விளையாட்டு மற்றும் கல்வி உபகரணங்கள் மூலம் முன்பருவக் கல்வி கற்பிக்கப்படுகிறது. மேலும், குழந்தைகளின் உடல், மொழி, மனம், சமூக மற்றும் அறிவு வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் “ஆடிப்பாடி விளையாடு பாப்பா” என்ற சிறப்பு பாடத்திட்டம் 12 மாதங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் குழந்தைகளின் வளர்ச்சி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பள்ளிக் கல்விக்கு தயார்படுத்தப்படுகின்றனர். தற்போது அங்கன்வாடி பணியாளர்கள் வீடு தோறும் சென்று குழந்தைகள் சேர்க்கை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, பெற்றோர்கள் தங்களது 2 முதல் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளை அருகிலுள்ள அங்கன்வாடி மையங்களில் ஜூன் மாதத்தில் சேர்த்து, அரசின் இலவச ஊட்டச்சத்து மற்றும் முன்பருவக் கல்வி சேவைகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)