பாலக்கோடு, மே 30:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கல்லூரி மாணவி ஒருவர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வாலிபர் ஒருவர் மீது சந்தேகம் தெரிவித்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
பாலக்கோடு அருகே உள்ள கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாதேஷ் - தமிழ்செல்வி தம்பதியினரின் மகள் சுபிக்ஷா (19), பாலக்கோடு அருகே உள்ள தனியார் கல்லூரியில் சி.எல்.டி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து கல்லூரிக்கு செல்வதாக கூறிச் சென்ற சுபிக்ஷா மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து மேற்கொண்ட விசாரணையில், தீத்தாரஅள்ளி பகுதியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி மாரியப்பன் (25) என்பவர் மாணவியை பின்தொடர்ந்து சென்றதாக தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மாரியப்பன் மீது சந்தேகம் இருப்பதாகவும், அவரை விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாயமான தனது மகளை கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் மாணவியின் தந்தை மாதேஷ் பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து, மாயமான கல்லூரி மாணவியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
குறிப்பு: காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல் தெரிந்தால் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது காவல்துறை உதவி எண்களுக்கோ தகவல் தெரிவிக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

