காரிமங்கலம், மே.13:
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தில், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேரூராட்சிகளில் குடிநீர் விநியோகம் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 12.05.2026 அன்று நடைபெற்றது.
கோடைகால குடிநீர் விநியோகம் குறித்து நடைபெற்ற ஆய்வில், கெரகோடஅள்ளி ஊராட்சியில் மின் மோட்டார் பழுதாகி 05.05.2026 அன்று தகவல் தெரிவிக்கப்பட்டும் இதுவரை சரிசெய்யப்படவில்லை என தெரியவந்தது. இதையடுத்து, பழுதடைந்த மோட்டாரை 15.05.2026க்குள் சரிசெய்து தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்து, அதன் விவரங்களை GPS புகைப்படத்துடன் அனுப்ப வேண்டும் என காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
மேலும், பந்தாரஅள்ளி ஊராட்சியில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி (OHT) குடிநீர் குழாயை சேதப்படுத்தியதாக கூறப்படும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், சேதத்தை சரிசெய்ய செலவிடப்பட்ட ரூ.1450 தொகையை அபராதமாக வசூலித்து அரசு கணக்கில் செலுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
தினசரி குடிநீர் விநியோக ஆய்வின் போது, பணிமேற்பார்வையாளர்கள் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்களது பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் தொடர்பான முழு விவரங்களை வழங்காதது நடவடிக்கைக்கு உரியது என மாவட்ட ஆட்சியர் எச்சரித்தார்.
நபார்டு திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டும் இன்னும் பயன்பாட்டிற்கு வராத OHT தொட்டிகளில் உடனடியாக குடிநீர் ஏற்ற நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது. திண்டல் ஊராட்சியின் மோட்டூர் மற்றும் தும்பலஅள்ளி ஊராட்சிகளில் உள்ள 10 ஆயிரம் லிட்டர் குடிநீர் தொட்டிகளும் ஆய்வு செய்யப்பட்டன.
நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைத்தல், ஏரிகள் புனரமைத்தல் மற்றும் கால்வாய்கள் தூர்வாருதல் போன்ற பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
மேலும், ஏற்கனவே நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகளை பராமரித்து தினசரி தண்ணீர் ஊற்றவும், நிலுவையில் உள்ள மரக்கன்றுகளை மழைக்காலத்தில் நடவு செய்யவும் உத்தரவிடப்பட்டது. பேகாரஅள்ளி ஊராட்சியில் 7,500 மரக்கன்றுகள் நடவு செய்து குறுங்காடு அமைக்கும் பணியை மழைக்காலம் தொடங்கியவுடன் துவங்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
புதிய மின் இணைப்பு வழங்கும் முன் வீட்டு வரி செலுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யவும், புதிய கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கும் போது மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு கட்டாயம் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம். சக்திவேல், மா. அறிவழகன், பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி, உதவி பொறியாளர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)