தருமபுரி, ஆகஸ்ட் 1:
பழங்குடியினரின் அனுபவ நிலங்களுக்கு வன உரிமைச் சட்டம் (Forest Rights Act)-ன் கீழ் பட்டா வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பழங்குடியினர் கிராமசபை கூட்டமைப்பு சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தின் பென்னாகரம், பாலக்கோடு பகுதிகளில் இருளர் சமூகத்தைச் சேர்ந்த பழங்குடியினரும், தருமபுரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டங்களில் மலையாளி, குருமன்ஸ் உள்ளிட்ட பழங்குடியினரும் கணிசமான அளவில் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பல ஆண்டுகளாக புறம்போக்கு நிலங்களில் விவசாயம் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
தாங்கள் நீண்ட காலமாக சாகுபடி செய்து வரும் நிலங்களுக்கு வன உரிமைச் சட்டத்தின் கீழ் பட்டா வழங்க வேண்டும் என்றும், நிலம் மற்றும் வீடு இல்லாத பழங்குடியினருக்கும் அதே சட்டத்தின் அடிப்படையில் நில உரிமை வழங்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தினர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில், பாலக்கோடு மற்றும் பென்னாகரம் வட்டங்களில் இருந்து 850 மனுக்கள், தருமபுரி மற்றும் நல்லம்பள்ளி வட்டங்களில் இருந்து 1,000 மனுக்கள், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் வட்டங்களில் இருந்து 4,500 மனுக்கள் என மொத்தம் 6,350 மனுக்கள் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா அவர்களிடம் வழங்கப்பட்டன.
இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மாவட்ட செயலாளர் கே.என். மல்லையன், மாவட்டத் தலைவர் அம்புரோஸ், மாவட்ட துணைத் தலைவர் கண்ணகி, பழங்குடியினர் கிராமசபை கூட்டமைப்பின் தலைவர்கள் முத்துவேடி, நாராயணன், சின்ன முனியன், அசோக்குமார், முருகன், சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
.gif)

.jpg)