Type Here to Get Search Results !

பென்னாகரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம் - தலைவர் வேல்முருகன் பங்கேற்பு.


பென்னாகரம், ஏப்ரல். 06:


தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்–2026 முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் பென்னாகரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டு, தருமபுரி மாவட்டத்தின் நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும், கட்சியின் “கேமரா” சின்னத்தையும் அறிமுகப்படுத்தினார்.


கூட்டத்தில் உரையாற்றிய வேல்முருகன், “இந்தத் தேர்தல் ஏமாற்றங்களுக்கும், வஞ்சகங்களுக்கும் எதிரான பாடமாக அமைய வேண்டும். கேமரா சின்னத்தில் வாக்களித்து எங்கள் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். மேலும், “மது, கஞ்சா இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும். தண்ணீரை விற்பனை செய்யாத நிலையை உருவாக்க வேண்டும். நஞ்சில்லாத உணவு, நோயில்லாத வாழ்வு, கடனில்லாத வாழ்க்கை ஆகிய இலக்குகளுடன் நாம் செயல்பட வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

தேர்தல் சூழலில் வாக்காளர்களை பணம் மூலம் பாதிக்க முயற்சிகள் நடைபெறுகின்றன என்றும், “உங்களை விலைபேச முயற்சிப்பார்கள். ஆனால் அதற்கு இடமளிக்காமல் விழிப்புணர்வுடன் வாக்களிக்க வேண்டும்” என வலியுறுத்தினார். பெரிய கட்சிகள் தங்களது ஆதிக்கத்தை தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கின்றன என்றும், மக்கள் தங்களது உரிமையை உணர்ந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


மேலும், “நான் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் 234 தொகுதிகளிலும் எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெற இரவும் பகலும் உழைப்பேன். வெற்றி பெற்ற பின் வேட்பாளர்களில் ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்போம்” என்றும் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் கூட்டணி ஆதரவாளர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies