பென்னாகரம், ஏப்ரல். 08:
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை சட்டவிரோதமாக கண்டறிந்து கருக்கலைப்பில் ஈடுபட்டதாக 2 பேரை சுகாதாரத்துறை மற்றும் போலீசார் கைது செய்துள்ளனர். பென்னாகரம் வட்டம் அஞ்சேஅள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட ரங்காபுரம் பகுதியில் இத்தகைய சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் ராஜேந்திரன் தலைமையிலான குழுவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, வட்டார மருத்துவ அலுவலர் ராமதாஸ், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவ குழுவினர் இணைந்து சோதனை நடத்தினர்.
அப்போது ரங்காபுரம் பகுதியில் செந்தில் என்பவரது வீட்டில் மேற்கொண்ட சோதனையில், கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறியும் உபகரணங்கள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில், ரங்காபுரத்தைச் சேர்ந்த பரிமளா (34), டிப்ளமோ நர்சிங் படித்தவர், கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து வந்ததாகவும், ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த சாந்தி (47) அவருக்கு உதவி செய்து கருக்கலைப்பில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, மாவட்ட சுகாதார அலுவலர் அளித்த புகாரின் பேரில், பென்னாகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு சுரேஷ் குமார் தலைமையிலான போலீசார் இருவரையும் கைது செய்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கடந்த ஆண்டு பாலக்கோடு பகுதியில் நடந்த இதே போன்ற வழக்கில் சிக்கிய பரிமளா, ஜாமினில் வெளியேறிய பின்னரும் மீண்டும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பென்னாகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

