Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே பட்டா வழங்க கோரி மலைகிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு.


பாலக்கோடு – ஏப்ரல் 08:


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள ஜிட்டாண்டஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட வஜ்ஜரபள்ளம் கிராம மக்கள், பட்டா வழங்காததை கண்டித்து வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முழுமையாக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இந்த கிராமத்தில் சுமார் 30 குடும்பங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் கடந்த 5 தலைமுறைகளாக வசித்து விவசாயம் செய்து வருகின்றனர். முன்பு அனாதீனம் புறம்போக்கு நிலமாக இருந்த இப்பகுதி, சில ஆண்டுகளுக்கு முன்பு வனப்பகுதியாக மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.


இதனைத் தொடர்ந்து, வனத்துறையினர் விவசாயம் செய்ய தடை விதித்ததுடன், மா, தென்னை உள்ளிட்ட மரங்களின் விளைச்சலை அறுவடை செய்ய கூடாது எனவும், குடியிருப்பு வீடுகள் மற்றும் மாட்டு கொட்டகைகளை அகற்ற வேண்டும் எனவும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


5 தலைமுறைகளாக வசித்து வரும் வீடுகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏ., எம்.பி. உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், 2026 சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்பதோடு, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகள் உள்ளிட்ட ஆவணங்களையும் திருப்பி ஒப்படைப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும், தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு வெளியிட்ட பின்னரும் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராதது மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தை வெளிப்படுத்துவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies