நல்லம்பள்ளி – ஏப்ரல் 08:
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே தளவாய்அள்ளி ஊராட்சிக்குட்பட்ட நேரு நகர் கிராம மக்கள், சுடுகாடு இட வசதி வழங்க கோரி தேர்தல் புறக்கணிப்பு அறிவித்த நிலையில், 4-வது நாளாகவும் உண்ணாவிரத போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். நேரு நகரில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் 800-க்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த 60 சென்ட் சுடுகாடு நிலம், தனி நபருக்கு வருவாய்த்துறை மூலம் பட்டா வழங்கப்பட்டதால், தற்போது கிராம மக்களுக்கு சுடுகாடு வசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், இயற்கை மரணம் அடைந்தவர்களை தங்கள் சொந்த கிராமத்தில் அடக்கம் செய்ய முடியாமல், பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். சுடுகாடு இடத்தை மீட்டுத் தரக்கோரி பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கடந்த ஏப்ரல் 5 முதல் கிராம மக்கள் கருப்பு கொடி ஏற்றி, சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டம் இன்று 4-வது நாளாக நீடித்து வருவதுடன், கிராம மக்கள் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக தருமபுரி தொகுதி எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரனும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார். போராட்டம் குறித்து தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் இண்டூர் போலீசார் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தற்போது பயன்படுத்தி வந்த சுடுகாடு அருகே மாற்று இடம் ஒதுக்கி தர முன்வந்தனர். ஆனால் அந்த இடம் நீர்வழிப் புறம்போக்கு நிலமாக இருப்பதால், அதை ஏற்க முடியாது என்றும், பழைய சுடுகாடு நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்றும் கிராம மக்கள் வலியுறுத்தினர்.
கோரிக்கை நிறைவேறாததால், மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை தொடரும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். சுடுகாடு வசதி கோரி 4-வது நாளாக நடைபெற்று வரும் இந்த போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

