பாலக்கோடு – ஏப்ரல் 02:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சாலையோரம் இருந்த 75 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் சொகுசு கார் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் பயணித்த குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த ராகவன் (55), தனது மனைவி, மகன் மற்றும் பேத்தியுடன் திருச்சியில் நடைபெற்ற உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் பெங்களூரு நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் காரில் பயணம் செய்துகொண்டிருந்தார்.
பாலக்கோடு அருகே கொலசனஅள்ளி பகுதியில் சென்றபோது, தூக்க கலக்கம் காரணமாக ராகவன் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் கார் சாலையோரம் இருந்த 75 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்தது. ஆனால் கார் நேரடியாக தண்ணீரில் விழாமல், கிணற்றின் பாதியில் உள்ள கரையில் சிக்கி தொங்கியதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. சத்தம் கேட்டு வந்த கிணற்றின் உரிமையாளர் மற்றும் உறவினர்கள் உடனடியாக கிணற்றில் இறங்கி காரில் இருந்தவர்களை பாதுகாப்பாக மீட்டனர்.
தகவலறிந்து வந்த தேசிய நெடுஞ்சாலை மீட்புக்குழுவினர் மற்றும் பாலக்கோடு டி.எஸ்.பி ராஜசுந்தர் தலைமையிலான போலீசார், கிரேன் மூலம் காரை மேலே எடுத்தனர். இந்த விபத்தின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

