Type Here to Get Search Results !

தருமபுரியில் வாக்காளர் விழிப்புணர்வு நடைப்பயிற்சி: 100% வாக்குப்பதிவை வலியுறுத்திய ஆட்சியர்.


தருமபுரி – ஏப்ரல் 03:


தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இளம் வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வாக்குப்பதிவின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் நடைப்பயிற்சி (Walkathon) நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு நடைப்பயிற்சி மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள தேர்தலில் “என் வாக்கு விற்பனைக்கல்ல” என்ற உறுதியுடன் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் இளம் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, “100% வாக்களிப்போம் – வலுவான ஜனநாயகத்தை உருவாக்குவோம்” என்ற கருத்தை முன்னிறுத்தி செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டு, இளம் வாக்காளர்கள், கல்லூரி மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.


மேலும், “என் நாடு என் ஓட்டு” என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் ரோபோட் (Robot) மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதேபோல், கல்லூரி மாணவியர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் இணைந்து கலைநிகழ்ச்சிகள் மூலம் “தேர்தல் திருவிழா”, “என் வாக்கு என் உரிமை” போன்ற கருத்துகளை பொதுமக்களிடம் கொண்டு சென்றனர்.


நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, “என் வாக்கு, என் உரிமை” என்ற வாசகத்துடன் ஸ்டிக்கர்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. மேலும் தண்ணீர் கேன்களில் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகள் ஒட்டப்பட்டு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100% வாக்குப்பதிவை உறுதிசெய்ய மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.


இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி கவிதா, திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ், மகளிர் திட்ட அலுவலர் திரு. சு. சுந்தர்ராஜன், தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி இரா. காயத்ரி உள்ளிட்ட அதிகாரிகள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies