தருமபுரி – ஏப்ரல் 11:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் பணிபுரியவுள்ள அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் பல்வேறு மையங்களில் நடைபெற்றன. தருமபுரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஸ்ரீ விஜய் வித்யாலயா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்புகளை தேர்தல் பொது பார்வையாளர்கள் டாக்டர் ஹீரா லால், திருமதி வந்தனா வைத்யா ஆகியோர், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்களின் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ள நிலையில், மாவட்டத்தின் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளிலும் பணியாற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இந்த இரண்டாம் கட்ட பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் (தனி) ஆகிய தொகுதிகளுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்களில் நடைபெற்று வருகின்றன. மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைத்து, வாக்குப்பதிவு நடைமுறைகள் குறித்து காலை மற்றும் பிற்பகல் என இரண்டு அமர்வுகளாக பயிற்சி அளிக்கப்பட்டது.
வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் நடைமுறைகளை முழுமையாகப் புரிந்து கொண்டு பிழையற்ற தேர்தல் செயல்முறையை உறுதிசெய்ய வேண்டும் என்றும், வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தொடர்புடைய பதிவுகளை முறையாக ஒப்படைக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
மேலும், எந்தவொரு சந்தேகங்கள் அல்லது குறைபாடுகள் ஏற்பட்டாலும் உடனடியாக மேலதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்றும், அரசியல் தாக்கம் இன்றி சுதந்திரமான மற்றும் நேர்மையான வாக்குப்பதிவு நடைபெற உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் தருமபுரி தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி இரா. காயத்ரி, பாலக்கோடு தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி மு. செல்வி, வட்டாட்சியர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)