தருமபுரி – ஏப்ரல் 08:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமனத்திற்கான 2-ஆம் கட்ட ஒதுக்கீடு (Randomization) பணி நடைபெற்றது. இந்த நிகழ்வு தேர்தல் பொது பார்வையாளர்கள் டாக்டர் ஹீரா லால், திருமதி வந்தனா வைத்யா, திரு பரம்வீர் சிங் ஆகியோர் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் 08.04.2026 அன்று நடைபெற்றது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குச்சாவடிகளுக்கான அலுவலர்கள், சம வாய்ப்பு முறையில் (Randomization) கணினி மூலம் தேர்வு செய்து ஒதுக்கீடு செய்யப்பட்டனர். வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த நியமனம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஒதுக்கீடு செய்யப்பட்ட அலுவலர்களுக்கு வரும் ஏப்ரல் 11, 2026 அன்று தங்களுக்கான தொகுதிகளில் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.
மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்பட்ட இடங்களுக்கு தேர்தல் நூண் பார்வையாளர்களை நியமிக்கும் பணியும் இதே சம வாய்ப்பு முறையில் மேற்கொள்ளப்பட்டு தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திரு. ஏ. பாலசுந்தரம், தேர்தல் வட்டாட்சியர் திரு. அன்பு உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

