நல்லம்பள்ளி, ஏப்ரல். 05:
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் தளவாய்அள்ளி ஊராட்சிக்குட்பட்ட நேரு நகர் பகுதியில், சுடுகாடு வசதி ஏற்படுத்தித் தராததை கண்டித்து கிராம மக்கள் கருப்பு கொடி ஏற்றி 2026 சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேரு நகர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு இருந்த பொதுச் சுடுகாடு நிலம், வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் தனிநபருக்கு பட்டா வழங்கப்பட்டதாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால் கடந்த 40 ஆண்டுகளாக, கிராமத்தில் இறந்தவர்களை தங்களது சொந்த ஊரில் அடக்கம் செய்ய முடியாமல், அருகிலுள்ள உறவினர்களின் கிராமங்களுக்கு கொண்டு சென்று அடக்கம் செய்யும் நிலை நீடித்து வருகிறது. சுடுகாடு நிலத்தை மீட்டுத் தர வேண்டும் என பல ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்திடம் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடிகள் ஏற்றி, “சுடுகாடு வழங்கும் வரை தேர்தலை புறக்கணிப்போம்” என்ற வாசகங்களுடன் பேனர்கள் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தகவலைத் தொடர்ந்து நல்லம்பள்ளி தாசில்தார் பிரசன்னமூர்த்தி மற்றும் இண்டூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. சுடுகாடு வசதி ஏற்படுத்தித் தரும் வரை தேர்தலை புறக்கணிப்போம் என கிராம மக்கள் உறுதியுடன் தெரிவித்ததால், அதிகாரிகள் பேச்சுவார்த்தையை கைவிட்டு திரும்பிச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

