தருமபுரி – ஏப்ரல் 02:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் தருமபுரி சட்டமன்ற தொகுதியின் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையமாக அமைக்கப்பட்டுள்ள செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வருகின்ற ஏப்ரல் 23, 2026 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், மே 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 057-பாலக்கோடு, 058-பென்னாகரம், 059-தருமபுரி, 060-பாப்பிரெட்டிப்பட்டி, 061-அரூர் (தனி) ஆகிய தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் தேர்தலுக்குப் பிறகு செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்படும்.
வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு, அடிப்படை வசதிகள், தடையில்லா மின்சாரம், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளனவா என்பதை ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும், 24 மணி நேரமும் CCTV கண்காணிப்பு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு, மத்திய மற்றும் மாநில காவல் பாதுகாப்பு, தீயணைப்பு ஏற்பாடுகள், ஊடக மைய வசதிகள், கட்டுப்பாட்டு மையம், இணைய வசதி மற்றும் ஜெனரேட்டர் வசதி உள்ளிட்ட அம்சங்களையும் அவர் விரிவாக பரிசீலித்தார்.
வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு வரும் வழிகள், முகவர்கள் அமர்வதற்கான இடவசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்து, மேற்கொள்ள வேண்டிய கூடுதல் பணிகளை விரைவாக நிறைவு செய்ய அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் தனி மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) / தேர்தல் கண்காணிப்பு அலுவலர் திரு. சந்திரசேகரன், தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி இரா. காயத்ரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திரு. ஏ. பாலசுந்தரம், தேர்தல் வட்டாட்சியர் திரு. அன்பு உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

