Type Here to Get Search Results !

தருமபுரியில் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு: கல்லூரி மாணவியர்களுக்கும் பொதுமக்களுக்கும் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டது.


தருமபுரி – ஏப்ரல் 01:


தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிசெய்ய பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, நல்லம்பள்ளி வட்டத்தில் உள்ள ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தேர்தலில் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் பத்திரிக்கை வடிவிலான “தேர்தல் திருவிழா அழைப்பிதழ்கள்” கல்லூரி மாணவியர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் தேர்தல் பொது பார்வையாளர் டாக்டர் ஹீரா லால், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்த நிகழ்வின் மூலம், “என் வாக்கு விற்பனைக்கல்ல” என்ற உறுதியுடன் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு மாணவியர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் உறுதிமொழி மாணவியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளை தாண்டி, எந்தவொரு தூண்டுதலுக்கும் ஆளாகாமல், அச்சமின்றி விழிப்புணர்வுடன் வாக்களிப்போம் என்ற உறுதியை அவர்கள் எடுத்துக்கொண்டனர்.


மேலும், “100% வாக்களிப்போம் – வலுவான ஜனநாயகத்தை உருவாக்குவோம்” என்ற செய்தியைப் பரப்பும் வகையில் கல்லூரியில் செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டு, மாணவியர்கள் மற்றும் அதிகாரிகள் புகைப்படம் எடுத்துக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதேபோல், ஈச்சம்பட்டி கிராமத்தில் பொதுமக்களின் வீடுகளுக்கு மேளதாளத்துடன் சென்று, தேர்தல் விழிப்புணர்வு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வும் தேர்தல் பொது பார்வையாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்றது.


மேலும், “என் நாடு என் ஓட்டு” என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில், ரோபோட் (Robot) மூலம் பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதையும் அதிகாரிகள் பார்வையிட்டனர். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிசெய்ய தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.


இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி கவிதா, மகளிர் திட்ட அலுவலர் திரு. சு. சுந்தர்ராஜன், தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி இரா. காயத்ரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு. வெ. லோகநாதன், வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள், கல்லூரி மாணவியர்கள், பேராசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies