தருமபுரி - மார்ச் 15:
தமிழ்நாட்டில் பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க வழங்கப்படும் மானியத் தொகை ₹25,000 இலிருந்து ₹50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது வரை உள்ள உலமாக்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ் இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் ஆகியோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இருசக்கர வாகன மானியம் பெற விரும்புவோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பித்து அனுமதி பெற்ற பின்னரே பயனாளிகள் இருசக்கர வாகனம் வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே தருமபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் பணிபுரியும் பேஷ் இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள் / ஆசிரியைகள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., கேட்டுக்கொண்டுள்ளார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

