தருமபுரி - மார்ச் 13:
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் சார்பில் மாணவர்களுக்கு உணவுப் பொருள் கலப்படம் மற்றும் தரமான உணவுப் பொருட்களை அடையாளம் காணுதல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மா. பழனி தலைமையேற்றார். பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழிப்புணர்வு உரையாற்றினார்.
அவர் தனது உரையில், உணவுப் பொருள் பாக்கெட்டுகளில் கண்டிப்பாக குறிப்பிடப்பட வேண்டிய உணவுப் பொருளின் பெயர், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, தயாரிப்பு நிறுவனத்தின் முகவரி, உணவு பாதுகாப்பு உரிம எண், நுகர்வோர் தொடர்பு எண், எடை அல்லது எண்ணிக்கை, உட்காரணிகள் மற்றும் ஊட்டச்சத்து தகவல்கள் போன்ற விவரங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்.
மேலும், வீட்டில் பயன்படுத்தப்படும் தேயிலை, சமையல் எண்ணெய், நெய், மசாலா பொருட்கள், தேன், பருப்பு வகைகள் உள்ளிட்டவற்றில் கலப்படம் இருப்பதை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்து நேரடி செயல்முறை விளக்கமும் அளித்தார். அதேபோல் அயோடின் உப்பின் முக்கியத்துவம் மற்றும் அயோடின் இல்லாத உப்பால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.
சேலம் உணவு பகுப்பாய்வு கூடத்தின் நடமாடும் வாகனத்தை முன்னிறுத்தி இளநிலை பொது பகுப்பாய்வாளர் கார்த்திகேயன் கலப்பட உணவுப் பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வு படக்காட்சிகளை திரையிட்டு விளக்கினார். இந்த நிகழ்ச்சியில் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் சம்பத்குமார், பொருளாளர் மணிவண்ணன், ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் குமரேசன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் அஜய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர். விழிப்புணர்வு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறையின் நடமாடும் பகுப்பாய்வு வாகனம் பென்னாகரம் அரசு மருத்துவமனை அருகில், கடமடை மற்றும் ஏட்டியாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தி கடைகள் மற்றும் உணவகங்களில் இருந்து தேயிலை, மசாலா பொருட்கள், பால், சில்லி சிக்கன் போன்ற உணவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு அங்கு உடனடியாக பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த பரிசோதனையில் தரம் குறைவாக இருந்ததாக கண்டறியப்பட்ட சில கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டு, தொடர்ந்து விதிமுறைகள் மீறப்பட்டால் உணவு பாதுகாப்பு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)
.jpg)