தருமபுரி - மார்ச். 13:
வீடு என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய கனவாகும். இந்த கனவை நனவாக்கும் நோக்கில் தமிழக அரசின் சார்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் கொண்டு வரப்பட்டு ஏழை மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படுகிறது.
ஆனால் இந்த திட்டத்தில் சில இடங்களில் முறைகேடுகள் நடைபெறுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக, உள்ளூர் ஆளும் கட்சியினர், ஊராட்சி செயலாளர்கள், 100 நாள் வேலைத் திட்ட பணித்தள பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் இணைந்து பயனாளிகளிடம் கட்டாயமாக “ஆபிஸ் செலவு” என்ற பெயரில் இலஞ்சம் பெறுகின்றனர் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சமீபத்தில் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவலின் படி, தருமபுரி மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.232.53 கோடி மதிப்பீட்டில் 7,485 வீடுகள் கட்டப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடிப்படையாக கொண்டு, ஒரு வீட்டிற்கு சராசரியாக ₹25,000 வரை இலஞ்சம் பெறப்பட்டதாக கணக்கிட்டால்: 7,485 × ₹25,000 = சுமார் ₹18,71,25,000 (சுமார் 18.7 கோடி ரூபாய்) வரை முறைகேடு நடந்திருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
திட்ட விதிப்படி, வீடு கட்டும் பணிகளில் 90 மனித உழைப்பு (man-days) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (100 நாள் வேலைத் திட்டம்) மூலம் வழங்கப்பட வேண்டும். ஆனால் நடைமுறையில் அந்த விதி பின்பற்றப்படவில்லை என கூறப்படுகிறது.
சில இடங்களில் வெறும் 10 பேரின் 100 நாள் வேலைத் திட்ட அடையாள அட்டைகளை மட்டும் பெற்றுக்கொண்டு, அவர்கள் அந்த வீட்டின் கட்டுமான பணியில் ஈடுபட்டது போல கணக்கு காட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த பணம் சம்பந்தப்பட்ட பணித்தள பொறுப்பாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட சிலர் இடையே பகிரப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த திட்டத்தின் கீழ் வீடு பெறுவதற்காக ₹50,000 வரை இலஞ்சம் கேட்கப்படுகின்றது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்த தொகை ஊராட்சி மன்ற தலைவர் முதல் வட்டார வளர்ச்சி அலுவலர் வரை பலரிடம் பகிரப்படுகிறது எனவும் கூறப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு வீடு கட்ட சுமார் ₹3.5 லட்சம் வழங்கப்படும் நிலையில், அதில் ₹50,000 வரை இலஞ்சமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், மீதமுள்ள தொகையில் ஏழை மக்கள் வீடு கட்டுவது மிகவும் கடினமாகிறது என பயனாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே இந்த குற்றச்சாட்டுகள் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் முழுமையான விசாரணை நடத்தி, முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

