தருமபுரி மாவட்டத்தில் கள்ள நாட்டு துப்பாக்கிகளை தயாரித்து விற்பனை செய்த ஒருவரை வனத்துறையினர் கைது செய்து, இரண்டு நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளனர். தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள பெருங்காடு கிராமம் வனப்பகுதியில் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கி மூலம் வனவிலங்குகளை வேட்டையாடி வருவதாக மாவட்ட வனத்துறைக்கு புகார் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து வனத்துறை சிறப்பு படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பெருங்காடு கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி (48) என்பவரின் வீட்டில் சோதனை நடத்தியபோது, கள்ள நாட்டு துப்பாக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விசாரணையில், அவர் சொந்தமாக நாட்டு துப்பாக்கிகளை தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 கள்ள நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள் பாலக்கோடு வனச்சரக அலுவலகம் ஒப்படைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, முத்துசாமியை வனத்துறையினர் பாலக்கோடு நீதிமன்றம் ஆஜர்படுத்தி, தருமபுரி சிறை சிறையில் அடைத்தனர்.
.gif)

