தருமபுரி – மார்ச் 19:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 முன்னிட்டு, தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில், அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வருகின்ற ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள தேர்தலில் “என் வாக்கு விற்பனைக்கல்ல, தவறாமல் வாக்களிப்பேன்” என்ற உறுதிமொழியுடன் பொதுமக்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கையாக அமைக்கப்பட்டிருந்த செல்பி பாயிண்டில் பொதுமக்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். மேலும், தேர்தலில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில், ஆட்டோக்கள் மற்றும் சுற்றுலா வாகனங்களில் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை ஒட்டி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளையும் மேற்கொண்டார்.
தருமபுரி மாவட்டத்தில் முழுமையான வாக்குப்பதிவை உறுதி செய்ய பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்தார். இந்த நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மகளிர் திட்ட அலுவலர் சுந்தர்ராஜன், தேர்தல் நடத்தும் அலுவலர் இரா. காயத்ரி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சி.க. ஜெயதேவ்ராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ. லோகநாதன், வட்டாட்சியர் ஜெ. சுகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)