தருமபுரி – மார்ச் 20:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 ஐ முன்னிட்டு, தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் தேர்தல் விழிப்புணர்வு ராட்சத பலூனை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் பறக்கவிட்டார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, “என் வாக்கு விற்பனைக்கல்ல – தவறாமல் வாக்களிப்பேன்” என்ற உறுதிமொழியை பொதுமக்களிடம் பரப்பும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. மேலும், பேருந்துகளில் தேர்தல் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகள் ஒட்டப்பட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அதேபோல், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலும் ராட்சத பலூன் பறக்கவிட்டு, அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அங்கு கூடுதலாக துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. வருகின்ற ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ள தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதிசெய்ய தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ், மகளிர் திட்ட அலுவலர் சுந்தர்ராஜன், தேர்தல் நடத்தும் அலுவலர் இரா. காயத்ரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ. லோகநாதன், நகராட்சி ஆணையர் வசந்தி, வட்டாட்சியர் ஜெ. சுகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)