Type Here to Get Search Results !

“சாலை விதிகளை மதிப்போம் – சமுதாயத்தைக் காப்போம்” விழிப்புணர்வு பேரணி: தருமபுரியில் ஆட்சியர் தொடங்கி வைத்தார்.


தருமபுரி - மார்ச் 12:


அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “சாலை விதிகளை மதிப்போம் – சமுதாயத்தைக் காப்போம்” என்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (12.03.2026) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


இதனைத் தொடர்ந்து சாலை பாதுகாப்பு குறித்து நடத்தப்பட்ட கலைநிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். மேலும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அதிநவீன மின்னணு குறும்பட வாகனத்தையும் ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், ஒரு நிமிட அலட்சியம் ஒரு குடும்பத்தின் வாழ்நாளையே மாற்றி விடும் என்பதையும், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் உயிரைக் காக்கும் முக்கிய அம்சங்கள் என்றும் தெரிவித்தார்.


மேலும் வயதிற்கு குறைவான சிறார்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர் அல்லது வாகன உரிமையாளருக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படுவதுடன் வாகன பதிவு ரத்து செய்யப்படலாம் என்றும், சம்பந்தப்பட்ட சிறாருக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.


சிறார்கள் வாகனம் ஓட்டுவதால் விபத்து ஏற்பட்டால் அவர்களின் கல்வி பாதிக்கப்படுவதுடன், வாழ்நாள் முழுவதும் உடல் ஊனம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் குடும்பம் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படும் என்பதால் பெற்றோர் இதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.


இன்றைய விழிப்புணர்வு பேரணியில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணி அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி வள்ளலார் திடல் வரை சென்று நிறைவடைந்தது. மேலும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன், தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் சி.க. ஜெயதேவ்ராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ. லோகநாதன், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, வட்டாட்சியர் சுகுமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் கலைக்குழுவினர்கள் கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies